Take a fresh look at your lifestyle.

பஞ்சரான பஞ்சாப் டீம்…ஹைதராபாத் அணி அபார வெற்றி!

401

துபாய் மைதானத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. துவக்க வீரர்கள் டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோ இருவரும் 15 ஓவர்கள் வரை பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்களை சேர்த்தனர். டேவிட் வார்னர் 40 பந்துகளில் 52 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

ஜானி பேர்ஸ்டோ 55 பந்துகளில் 6 சிக்ஸர், 7 பவுண்டரிகள் விளாசி 97 ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்பினார். அடுத்துக் களமிறங்கிய அப்துல் சமது, மனீஷ் பாண்டே, கேன் வில்லியம்சன் போன்ற வீரர்கள் அதிரடி காட்ட திணறினர். இறுதியில், ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 201 ரன்களை குவித்தது.

பஞ்சாப் அணிக்காக ரவி பிஷ்னோய் நான்கு ஓவர்கள் வீசி 29 ரன்கள் விட்டுக்கொடுத்த மூன்று விக்கெட்களை கைபற்றி அசத்தினார்.

202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய பஞ்சாப் அணி துவக்கத்தில் படுமோசமாகச் சொதப்பியது. மயங்க் அகர்வால் 9 ரன்களுக்கு ரன்-அவுட் ஆகி நடையைக் கட்டினார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் கே.எல்.ராகுல் 11 ரன்கள் மட்டுமே சேர்த்தார். மூன்றாவது வரிசையில் களமிறங்கிய இளம் வீரர் சிம்ரன் சிங் 11 ரன்கள் எடுத்தார். இதனால், பஞ்சாப் அணி 6.4 ஓவர்களில் 58 ரன்கள் சேர்த்து மூன்று விக்கெட்களை இழந்து தடுமாறியது.

ரன் வேகம் குறைந்த நிலையில், நிக்கோலஸ் பூரண் அதிரடி காட்டத் தொடங்கினார். 37 பந்துகளில் 7 சிக்ஸர், 5 பவுண்டரி விளாசி 77 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்துக் களமிறங்கிய கிளென் மேக்ஸ்வெல் போன்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.

இதனால், பஞ்சாப் அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 132 ரன்கள் மட்டுமே சேர்த்து 69 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ஹைதராபாத் அணியின் ரஷீத் கான் நான்கு ஓவர்கள் வீசி 12 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.