Take a fresh look at your lifestyle.

ராயன் – விமர்சனம்

104

தனுஷ் நடித்து இயக்கியிருக்கும் படம் தான் ராயன். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கிறது.

தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் இப்படம் இவருக்கு 50வது படமாகும். எப்போதுமே ஒரு நடிகருக்கு 50வது படம் என்பது அவர்களது வாழ்க்கையில் ஒரு முக்கியமான படமாக அமைய வேண்டும் என்று எண்ணுவார்கள்.

அப்படியாக தனுஷிற்கு இப்படம் எப்படி கைகொடுத்திருக்கிறது என்பதை விமர்சனம் மூலம் பார்த்து விடலாம்.

கிராமத்திலிருந்து தனது சகோதரர்கள் இருவர் மற்றும் சகோதரியை அழைத்துக் கொண்டு சென்னைக்கு வாழ்வு தேடி வருகிறார் தனுஷ்.

மிகவும் கஷ்டப்பட்டு உழைத்து தனது தம்பிகளையும் தங்கையையும் வளர்க்கிறார் தனுஷ்.

மூத்த தம்பியான சந்தீப் கிஷன், குடித்துவிட்டு ஏரியாவில் இருப்பவர்களிடம் சண்டை இழுப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். இரண்டாவது தம்பி காளிதாஸ் கல்லூரியில் படித்து வருகிறார்.

தங்கை துஷாராவை நல்ல இடத்தில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று எண்ணுகிறார் தனுஷ். அதற்கான வேலையில் இருக்கும் நேரத்தில், ஏரியா ரெளடியான சரவணனின் மகனை கொன்று விடுகிறார் சந்தீப்.

அதற்கு பழி வாங்கும் விதமாக, சந்தீப்பை தீர்த்துகட்ட நினைக்கிறார் சரவணன். தம்பிக்காக சரவணனை கொலை செய்கிறார் தனுஷ்.

இச்சமயத்தில், மற்றொரு ரெளடியான இப்படி ஒரு அரக்கத்தனமாக இருக்கும் தனுஷ் இருந்தால் தனக்கு தான் ஆபத்து என்று தனுஷை கொல்ல நினைக்கிறார் எஸ் ஜே சூர்யா.

அதன்பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.

ஒரு நடிகனாக இப்படத்தில் தனது முத்திரையை கொடுத்திருந்தாலும், இயக்குனராக தனுஷ் ஒரு இடத்தை தக்க வைக்க தவறியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

முதல் பாதி முழுவதும் ரஜினி நடித்து வெளியான பாட்ஷா படத்தின் அப்பட்டமான காப்பியாக தான் இருந்தது. எதற்காக தனுஷ் இப்படி இறுக்கமாக இருக்கிறார் என்பதற்கு வலுவான ஒரு காரணம் இல்லாதது பெரும் ஏமாற்றம் தான்.

சந்தீப் மற்றும் காளிதாஸ் இருவருக்குமே சரிசமமான கதாபாத்திரம் தான். இதில் சந்தீப் கேரக்டர் பெரிதாகவே காட்சிகளில் பயன்படுத்தப்பட்டது.

தனக்குக் கொடுக்கப்பட்டதை அளவாக செய்து முடித்திருக்கிறார் துஷாரா விஜயன்..

பல படங்களில் தொடர்ச்சியாக வில்லனாக அசத்தி வரும் எஸ் ஜே சூர்யாவிற்கு இப்படத்தில் சற்று சறுக்கல் தான்.

கதையில் பெரிதான ஒரு ஈர்ப்பு இல்லாததால், படத்திற்குள் நம்மால் பயணிக்க முடியவில்லை. அலுத்துப் போன கதையை கையில் எடுத்த இயக்குனர் தனுஷ், திரைக்கதையாக கொடுக்க வேண்டிய இடத்திலும் தோல்வியை சந்தித்திருக்கிறார்.

இரண்டாம் பாதியில் ட்விஸ்ட் வைக்கிறேன் என்று நம்மை பெரிதாகவே சோதித்துவிட்டார் இயக்குனர்.

ஏ ஆர் ரகுமானின் இசை மட்டுமே நமக்குக் கிடைத்த மிகப்பெரும் ஆறுதல். ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு ஓகே ரகம்.

ரேட்டிங் – 1.75/5