எலக்சன் விமர்சனம்..!
தேர்தலில் ஒருவர் போட்டியிட்டால், அதற்கு பின் அவரை சுற்றி நடக்கும் அரசியலும், விளைவுகளையும் சொல்லும் படம்.
நாயகன் விஜய் குமார், தந்தை ஜார்ஜ் மரியான் மற்றும் தாயுடன் வாழ்ந்து வருகிறார். இவரது தந்தை ஜார்ஜ், பிரபல அரசியல் கட்சியில் தீவிர விசுவாசியாக இருக்கிறார். ஆனால், கட்சி இவருக்கு எந்த பொறுப்பும் தராமல் தொண்டனாகவே பார்க்கிறது.
இந்நிலையில் ஊராட்சி ஒன்றிய தலைவர் தேர்தல் வருகிறது. இதில் பல கட்சிகள் போட்டியிடும் நிலையில், உறவினர் பவெல் நவகீதன் கட்டாயத்தின் பெயரில் விஜய் குமார் தேர்தலில் நிற்கிறார். இதில் தோல்வி அடையும் விஜய் குமார், பல இழப்புகளையும் விரோதிகளையும் சந்திக்கிறார்.
இறுதியில் விஜய் குமார் இழப்புகளில் இருந்து மீண்டு வந்தாரா? மீண்டும் அரசியலில் இறங்கினாரா? விஜய் குமார் வாழ்க்கை என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் விஜய் குமார், நடராசன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருக்கிறார். இவரது யதார்த்தமான நடிப்பும், சண்டை காட்சியும் ரசிக்க வைக்கிறது. குறிப்பாக ரொமான்ஸ் காட்சிகளில் அதிக கவனம் செலுத்தி இருக்கிறார்.
நாயகியாக நடித்து இருக்கும் பிரீத்தி அஸ்ராணி, விஜய் குமார் பக்கபலமாக நடித்து கவனிக்க வைத்து இருக்கிறார். ரொமான்ஸ், வருத்தம், துணிச்சல் என நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார். மற்றொரு நாயகியான ரிச்சா ஜோஷி கொடுத்த வேலையை செய்திருக்கிறார்.
தந்தையாக நடித்து இருக்கும் ஜார்ஜ் மரியான், அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கட்சியை பற்றி பேசும் போதும், கட்சி தன்னை கைவிட்ட போதும் நடிப்பில் பளிச்சிடுகிறார். விஜய் குமாரின் உறவினராக வரும் பவெல் நவகீதனுக்கு நடிக்கும் வாய்ப்பு அதிகம் கிடைத்துள்ளது. அவரும் கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்து இருக்கிறார். ஒரு அரசியல்வாதியின் பிரதிபலிப்பாக தெரிந்து இருக்கிறார் திலீபன். மேலும் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்.
அரசியல் கதையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் தமிழ். அரசியல் படம் என்றவுடன் குறிப்பிட்ட கட்சியை சார்ந்து படம் எடுக்காமல் இயக்கி இருப்பது சிறப்பு. பல திருப்பங்கள் வைத்து, அடுத்தடுத்து என்ன நடக்கும் என்பதை சொல்ல முடியாத அளவிற்கு படத்தை கொடுத்து இருக்கிறார். அரசியல் என்பது மக்களுக்கானது, சமுகத்திற்கானது என்பதை சொல்லி இருக்கிறார் இயக்குனர்.
கோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு பயணித்து இருக்கிறது. மகேந்திரன் ஜெயராஜுவின் ஒளிப்பதிவு, கிராமத்து அழகை அப்படியே படமாக்கி இருக்கிறது.