ஸ்பெயின் நாட்டு கால்பந்து வீரரை பயிற்சியாளராக நியமித்துள்ளது வேல்ஸ் ஃபுட்பால் கிளப்!

 

வேல்ஸ் குழுமங்களில் நிறுவனத்தலைவர் டாக்டர். ஐசரி கே. கணேஷ் பன்முகம் திறமை கொண்டவர். கல்வி, திரைத்துறை, விளையாட்டு, சமூக சேவை எனப்பல தளங்களில் முன்னேற்றத்தை கொண்டு வர உழைத்து வருபவர். தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கம் மற்றும் இந்திய டேக்வாண்டோ கூட்டமைப்பு ஆகியவற்றின் தலைவராக உள்ள டாக்டர் ஐசரி.கே.கணேஷ், விளையாட்டு வீரர்களை கண்டறிந்து அவர்களின் திறமைகளை வளர்ப்பதற்காக தொடர்ந்து பயணித்து வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக டாக்டர் ஐசரி கே கணேஷின் சிந்தனையில் உருவானது தான் வேல்ஸ் கால்பந்து கிளப். இந்த கிளப் தமிழ்நாட்டில் கால்பந்து விளையாட்டை வளர்ப்பதற்காக தொடங்கப்பட்டது. தற்போது இந்த கிளப் கால்பந்து விளையாட்டு மீது ஆர்வம் கொண்டுள்ள பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக ஒரு முன்னோடி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வேல்ஸ் குழுமங்களின் நிறுவனத்தலைவர் டாக்டர். ஐசரி.கே கணேஷ்,”கிரிக்கெட் உலகின் முதன்மையான விளையாட்டு கிடையாது. கால்பந்து தான் முதன்மையான விளையாட்டு. கிரிக்கெட் ஒரு சில இடங்களில் மட்டும் தான் விளையாடப்பட்டு வருகிறது, ஃபுட்பாலோ உலகம் முழுவதும் விளையாடப்பட்டு வருகிறது.

 

தமிழ்நாட்டில் நம்மால் கால்பந்து விளையாட்டை அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்ல முடியவில்லை. அதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. இதையெல்லாம் நன்கு கவனித்த நான் தமிழ்நாட்டில் கால்பந்து விளையாட்டை அடுத்த தளத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என வேல்ஸ் ஃபுட்பால் கிளப்பை தொடங்கினேன். இந்த கிளப் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு இலவச பயிற்சிகளை வழங்கும். அவர்கள் தங்கி பயிற்சி மேற்கொள்ள வசதியாக அவர்களுக்கு ஒரு தங்குமிடமும் தயார் செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் குக்கிராமங்களில் உள்ள ஃபுட்பால் மீது ஆர்வம் கொண்ட வசதியில்லாத பல மாணவர்கள் இருப்பார்கள். அவர்களை, கண்டெடுத்து வேல்ஸ் ஃபுட்பால் கிளப்பில் ஆட வைத்து இந்திய அணிக்கு அனுப்புவதுதான் எங்கள் நோக்கம். இவர்களுக்கு சர்வதேச அளவிலான பயிற்சிகள் வழங்கப்படும் என்பதை இங்கு பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன் அதற்காக தான் ஸ்பெயின் கால்பந்து வீரர் திரு கெய்ஸ்கா டோகேரோவை, வேல்ஸ் ஃபுட்பால் கிளப்பின் சர்வதேச தூதராக நியமித்துள்ளோம். தமிழ்நாடு, தேசிய மற்றும் சர்வதேச அளவில் போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளோம் அதற்கு கெய்ஸ்கா நமக்கு உதவுவார் என நம்புகிறேன். இந்த வருடம் நடக்க இருக்கும் ஐ-லீக்கில் வேல்ஸ் ஃப்சி மாணவர்கள் நிச்சயம் நல்ல இடம் பிடிப்பார்கள் என எனக்கு தெரியும். நல்ல நோக்கம் நிச்சயம் வெற்றி பெற செய்தியாளர்கள் இந்த செய்தியை தமிழ்நாட்டின் மூலை முடுக்கு வரை சென்று சேர்க்க வேண்டும்”.

அதேபோல முன்னணி விளையாட்டு ஆடை பிராண்டான PUMA, வேல்ஸ் கால்பந்து கிளப்புடன் கூட்டு சேர்ந்து முதல் அணிக்கான ஜெர்சிகளை ஸ்பான்சர் செய்கிறது. இதற்காக பூமாவின் தென் மண்டல தலைவர் திரு.ரமேஷ் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

ஸ்பெயின் கால்பந்து வீரர் கெய்ஸ்கா டோகேரோ பேசியதாவது, “வேல்ஸ் நிறுவனத்தின் நல்ல நோக்கத்தை ஆதரிக்கவே நானும் எனது அணியும் இங்கு வந்துள்ளோம். மாணவர்களுக்கு சர்வதேச பயிற்சி அளிக்கும் வாய்ப்பு எனக்கு வழங்கப்பட்டதை நான் பெருமையாக கருதுகிறேன். எங்களுக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்த சென்னைக்கும், வேல்ஸ் நிறுவனத்திற்கும் நன்றி. இங்கு வந்திருப்பதில் மகிழ்ச்சி!” என்றார்.

Comments (0)
Add Comment