Take a fresh look at your lifestyle.

லவ்வர் விமர்சனம்

115

 

 

 

 

கதாநாயகன் மணிகண்டன் வேலைக்கு எதுவும் செல்லாமல் கஃபே வைக்க வேண்டும் என்ற முயற்சியில் அலைந்து கொண்டிருக்கிறார். இவரது காதலி ஸ்ரீ கவுரி பிரியா ஐடி கம்பெனியில் வேலை செய்கிறார். இவர்கள் இருவருக்கும் இடையில் அடிக்கடி சண்டை நடக்கிறது. இருவரும் பேசாமல் இருக்கின்றனர்.

 

இந்த நேரத்தில் மணிகண்டன் தனக்கென்று ஒரு வேலையை தேடிக்கொண்டு வேலை செய்து வருகிறார். ஒரு கட்டத்தில் மீண்டும் கஃபே வைக்கும் முயற்சியில் இறங்கவே இவருக்கு வேலை போய்விடுகிறது. இதை தன் காதலி கவுரியிடம் சொல்லாமல் மறைக்கிறார்.

 

இது ஒருபுறம் இருக்க கவுரி தன் மன அழுத்தத்தை குறைப்பதற்காக மணிகண்டனிடம் சொல்லாமல் நண்பர்களுடன் வெளியூர்களுக்கு ட்ரிப் செல்கிறார். ஒரு கட்டத்தில் இருவருக்கும் உண்மை தெரிந்துவிடுகிறது.

 

இறுதியில் இவர்களது காதல் என்ன ஆனது? மணிகண்டன் கஃபே வைத்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

 

நாயகன் மணிகண்டன் வித்தியாசமான நடிப்பை கொடுத்து  கைதட்டல் பெறுகிறார். இவரை திரையில் பார்க்கும் பொழுது அந்த பெண்ணை கொடுமைப்படுத்த வந்துட்டான் என்ற எண்ணம் தோன்றும் அளவிற்கு கதாபாத்திரத்தை முழுமையாக புரிந்து நடித்துள்ளார். தன் கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்துள்ளார்.

 

நாயகியாக வரும் ஸ்ரீ கவுரி பிரியா அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். டாக்ஸிக்கான உறவில் இருக்கும் பெண்கள் படும் பாட்டை தன் நடிப்பின் மூலம் கண் முன் கொண்டு வந்துள்ளார். மற்ற கதாபாத்திரங்கள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளனர்.

 

இயக்குனர் பிரபுராம் வியாஸ் திரைக்கதை மற்றும் வசனத்தை சிறப்பாக எழுதி இயக்கியிருக்கிறார். ஒரு இளைஞன் தான் காதலிக்கும் பெண்ணை அதிகாரம் செய்தால் அவள் மனநிலை எப்படி மாறும் என்பதை தெளிவாக காட்டியுள்ளார். கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். காதலர்களுக்கு இடையில் நடக்கும் பிரச்சனையை திரையில் பார்க்கும் போது, நிஜ காதலர்கள் வாழ்க்கையில் கனெக்ட் ஆவது சிறப்பு.

 

ஷான் ரோல்டனின் இசை படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. ஸ்ரேயாஸ் கிருஷ்ணா காட்சிகளை அழகாக ஒளிப்பதிவு செய்துள்ளார். பரத் விக்ரமன் படத்தொகுப்பு கவர்கிறது.