சாச்சி அவர்களின் இயக்கத்தில் சதீஷ், பவல் நவகீதன், அஜய்ராஜ், ரித்திகா, மைம் கோபி, பாவா செல்லதுரை, ராமதாஸ் உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் சட்டம் என் கையில்.
பி ஜி முத்தையா ஒளிப்பதிவு செய்ய ஜோன்ஸ் ராபர்ட் இசையமைத்திருக்கிறார்.
ஏற்காடு பகுதியில் இரவு நேரத்தில் படபடப்பாகவும் அதிவேகமாகவும் காரை ஓட்டிக் கொண்டுச் செல்கிறார் சதீஷ்.
அதிவேகமாக சென்ற கார் பைக்கில் வந்த நபர் ஒருவரை இடித்து விடுகிறது. இதில் பைக்கில் வந்த நபர் சம்பவ இடத்திலேயே இறந்து விடுகிறார்.
பிணத்தை தனது காரில் வைத்துவிட்டு மீண்டும் காரை எடுத்துச் செல்கிறார். செல்லும் வழியில் குடித்து விட்டு கார் ஓட்டியதாகவும் போலீஸாரை தாக்கியதற்காகவும் கைது செய்யப்படுகிறார் சதீஷ்.
தன்னை தாக்கிய சதீஷை பழி வாங்க நினைக்கிறார் போலீஸாக வரும் பவல் நவகீதன். பவல் நவகீதன் செய்யும் செயல் மற்றொரு போலீஸாக வரும் அஜய் ராஜிற்கு பிடிப்பதில்லை. ஆகவே சதீஷை காப்பாற்ற நினைக்கிறார் அஜய் ராஜ்.
இந்த சூழலில், காரில் இறந்து கிடக்கும் அந்த நபர் யார்.? சதிஷின் மெளனத்திற்கு காரணம் என்ன.?? என்பதற்கான விடையை இரண்டாம் பாதியில் வைத்திருக்கிறார் இயக்குனர்.
கதையின் நாயகனாக சதீஷ் என்று கூறுவதை விட பவல் நவகீதன் தான் என்று கூற வேண்டும். கதை முழுவதும் இவராலே நகர்கிறது.
கெஸ்ட் ரோலில் நடிப்பது போன்று ஒருசில காட்சிகளில் நடித்துச் சென்றிருக்கிறார் சதீஷ். அதிலும், ஒரு சில இடங்களில் எட்டிப் பார்த்த ஓவர் ஆக்டிங்கை அதிகமாகவே குறைத்திருக்கலாம். அஜய் ராஜின் நடிப்பும் பாராட்டும்படியாக இருந்தது.
பரபர கதையில் மிகவும் சுவாரஸ்யமான திரைக்கதை அமைத்து அதை தரமான படைப்பாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் சாச்சி.
ஒரே இரவில் நடக்கும் கதை என்பதால், திரைக்கதையை அதற்கேற்றவாறு வேகமாகவே கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர்.
அண்ணன் – தங்கை பாடல் ரசிக்க வைத்தது. பின்னணி இசையும் பலம் தான். பி ஜி முத்தையாவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.
சட்டம் என் கையில் – வேகம்…