Take a fresh look at your lifestyle.

தாத்தா ‘குறும்படம் விமர்சனம்.!

ஜனகராஜ், ஏ.ரேவதி, ரிஷி, ஞான ஷ்யாம் , மோனிஷ்,கயல் தேவராஜ் ,தீபா , முருகன் மந்திரம், ராயல் பிரபாகர் ஆகியோர் நடித்துள்ளனர்.

10,089

 

 

இயக்கம்- நரேஷ்,.ஒளிப்பதிவு -வினோத் ராஜா ,இசை -அமினா ரஃபீக் – சந்தோஷ் ,கலை இயக்கம் – வீரசமர் ,எடிட்டிங் -நாஷ், உடைகள் – வாசுகி,மேக் அப் -கயல் , தயாரிப்பு நிர்வாகம் -எஸ். செளத்ரி .

இம்ப்ரஸ் பிலிம்ஸ் சார்பில் கவிதா .எஸ் தயாரித்துள்ளார். இந்தக் குறும்படம் ஷார்ட் ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

 

தான் நினைத்த மாதிரி மகனை உருவாக்க முடியவில்லை என்றால் அந்தக் கனவை தனது பேரன்கள் மீது ஏற்றி மகிழ்வது தாத்தாக்களின் இயல்பு.

அதனால்தான் தாத்தாக்கள் பேரன்களுக்கு 200 சதவீதம் சுதந்திரம் கொடுத்து செல்லம் காட்டுகிறார்கள். அவர்களின் மகிழ்ச்சிக்காக எந்த எல்லைக்கும் செல்லும் வேலைகளையும் தாத்தாக்கள் செய்கிறார்கள் .இந்த உளவியல் உண்மை பேரன்களுக்கே தெரியாது.

அப்படி ஒரு தாத்தா ,தனது பேரனின் ஆசையை நிறைவேற்றும் கதை தான் ‘தாத்தா ‘ குறும்படமாக உருவாகி இருக்கிறது.

 

தாத்தா ஜனகராஜ் தனது மனைவியுடன் தனியே வசித்து வருகிறார் .தனிக்குடித்தனம் செய்து வரும் அவரது மகன் தனது மகன் சரணைக் கொண்டு வந்து விட்டுச் செல்கிறார்.

தாத்தா பாட்டி அரவணைப்பில் இருக்கும் பேரனுக்கு அந்த வீடு போரடிக்கவே பக்கத்து வீட்டிற்கு விளையாடச் செல்கிறான்.

பக்கத்து வீட்டுச் சிறுவன் அஜய் ஒரு ரிமோட் காரை சரணிடம் காட்டுகிறான் .அது தனது பிறந்தநாளில் தனது தந்தையின் பரிசளிப்பு என்கிறான் .அதைப் பார்த்தது முதல் சரணுக்குள் ஏக்கம் பொங்க ஆரம்பிக்கிறது.முகம் வாடி அமர்ந்திருக்கும் அவனிடம் பாட்டி விசாரிக்கும் போது அந்த ரிமோட் கார் ஆசையைக் கூறுகிறான் தாத்தாவும் தன் பேரனுக்கு அந்தக் காரை வாங்கிக் கொடுக்க விரும்புகிறார்.

 

தாத்தா ஜனகராஜ் கடையில் விலை விசாரித்த போது அந்த ரிமோட் காரின் விலை 800 ரூபாய் என்கிறார்கள். பலரிடம் கடன் கேட்டும் கிடைக்காமல் தன்னிடம் உள்ள சைக்கிளை,தனது இளமைக்காலத்தில் சைக்கிள் ரேஸ் போட்டியில் வென்று பரிசாக வாங்கிய முன் கதை வரலாறு உள்ள அந்த பெருமைக்குரிய சைக்கிளை பேரனுக்காக 500 ரூபாய்க்கு விற்று மேலும் 300 ரூபாய் கடன் பெற்று அந்த ரிமோட் காரை வாங்கி வருகிறார்.

 

அதைப் பார்த்த பேரன் மகிழ்ச்சி அடைந்து தாத்தாவைப் பெருமையாகப் பார்க்கிறான் .அவனது சிரிப்பையும் சந்தோஷத்தையும் கண்டு தனது அனைத்து சிரமங்களையும், துயரங்களையும் மறந்து பெருமையோடு புன்னகைக்கிறார் தாத்தா ஜனகராஜ்.

இத்துடன் கதை முடிகிறது.

 

 

ஒரு தலைமுறையின் மகிழ்ச்சி ,போன தலைமுறையின் தியாகங்களால் கட்டப்பட்டது என்பதை அடுத்தடுத்த தலைமுறைகள் உணர்வதே இல்லை. தனது பேரனின் மகிழ்ச்சிக்காகத் தனது வாழ்க்கையின் வழித்துணை போலத் தொடர்ந்து கொண்டிருந்த சைக்கிளை விற்று அந்த ஆசையை நிறைவேற்றி வைக்கிறார் தாத்தா.

 

அது பற்றி மனைவி கேட்கும்போது பேரனின் மகிழ்ச்சியை விட இதெல்லாம் பெரிதில்லை என்கிறார்.

பேரனின் சிரிப்பில் தாத்தா சொர்க்கத்தைக் காண்கிறார்.இந்தக் காட்சிகள் நெகிழ வைப்பவை.

 

இதில் தாத்தாவாக ஜனகராஜ் நடித்துள்ளார் .அப்பாடா பார்த்து எவ்வளவு நாள் ஆகிவிட்டது என்று தோன்றுகிறது.அவரது தோற்றமும், உடலும், உடல் மொழியும், குரலும் அச்சு அசலாக அந்த ஏழைத் தாத்தாவாகவே மாற்றி உள்ளன.இந்தச் சிறு படத்தில்தான் அவருக்கு எவ்வளவு முக பாவனைகள் காட்டக்கூடிய வாய்ப்புகள்.கடந்த கால ஏக்கம் ,காதல், அன்பு, பாசம், துயரம், பூரிப்பு என அனைத்தையும் தனது அனுபவத்தில் அனாயாசமாக நடிப்பாக வெளிப்படுத்தி உள்ளார்.

 

 

அவரது மனைவியாக நடித்துள்ள ஏ. ரேவதியும் பாசம் காட்டும் பாட்டியாக நடிப்பால் கவர்கிறார்.

 

பேரன் சரணாக வரும் சிறுவன் ஞானஷ்யாமும் குழந்தைமை பொலிந்த முகத்தைக் காட்டி இயல்பாக நடித்துள்ளான்.

 

சமகால யுகத்தின் பிரதிநிதியாக ஜனகராஜின் மகனாக ரிஷி நடித்துள்ளார்.இவர் தமிழ், மலையாளப் படங்கள், இணைத்தொடர்கள் என்று நடித்து வருபவர். சில காட்சிகளில் வந்தாலும் அவர் தன் வேலையைச் சரியாகச் செய்துள்ளார்.

 

 

ஜனகராஜுடன் பணியாற்றும் வாட்ச்மேனாக முருகன் மந்திரம் ,பழைய பொருட்கள் வாங்கும் ‘காயலான் ‘ கடைக்காரராக யோகி தேவராஜ், பொம்மைக் கடைக்காரராக ராயல் பிரபாகர் நடித்துள்ளனர்.இவர்களும் பாத்திரத்தின் தன்மைக்கேற்ற தோற்றம் நடிப்பு என்று பதிகிறார்கள் .

 

படத்தின் காட்சிகளில் மிகை ஒளி தவிர்த்து,இயற்கை ஒளியில் நேர்த்தியாக ஒளிப்பதிவு செய்துள்ளார் வினோத் ராஜா.

 

படத்தின் காட்சிகள் இயல்பாகத் தோன்றியதற்கு அனுபவமுள்ள கலை இயக்குநர் வீரசமரின் பங்களிப்பும் உண்டு.

 

எடிட்டர் நாஷின் உறுத்தல் இல்லாத படத்தொகுப்பு சிறப்பு.

 

இயல்பான வேகத்தில் பயணிக்கும் ஆற்றோட்டமான கதை கொண்ட படத்திற்குப் பக்கபலமாக அமினா ரஃபீக், சந்தோஷ் ஆகியோர் அமைத்த பின்னணி இசையும் அமைந்துள்ளது.

 

மிகைச் சொற்களற்ற எளிய வசனங்கள் படத்திற்கு இயல்பு தன்மையைக் கூட்டுகின்றன.

 

சினிமாவிற்கான செயற்கை பரபரப்பின்றி யதார்த்த நோக்கில் இந்தப் படம் உருவாகி உள்ளது.குறும்படம் என்ற அளவில் இயக்குநர் நரேஷ் தன் கதை கூறும் முறையில் வெற்றி பெற்றுள்ளார். அவரது பெரும்பட முயற்சிக்கு வாழ்த்துகள்!

 

ஒவ்வொரு தாத்தாவின் முகச்சுருக்கங்களுக்குப் பின்னேயும் வலிகள் நிறைந்த பல முன்கதைச் சுருக்கங்கள் உள்ளன.

 

இளைய தலைமுறை மூத்த தலைமுறையின் தியாகங்களைப் புரிந்து கொள்ள ஒரு சிறு உதாரணமாக இந்த ‘தாத்தா’ குறும்படம் அமைந்துள்ளது எனலாம்.