விஜய்குமார் நடிக்கும் ‘எலக்சன்’ பட பத்திரிக்கையாளர் சந்திப்பு*
ரீல் குட் ஃபிலிம்ஸின் 'எலக்சன்' படத்தின் முன்னோட்டம் வெளியீடு.
ரீல் குட் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரிப்பில் விஜய்குமார் நடிப்பில் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகி, மே 17ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் சக்தி பிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் பிரபல விநியோகஸ்தர் பி. சக்தி வேலன் வெளியிடும் ‘எலக்சன்’ எனும் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதன் போது பட குழுவினர் கலந்து கொண்டனர்.
படத்தின் தயாரிப்பாளர் ஆதித்யா அனைவரையும் வரவேற்று பேசுகையில், ” தமிழ் திரையுலகில் தயாரிப்பாளராக அறிமுகமாகி வெற்றி பெறுவதற்கு வழிகாட்டியாக திகழ்ந்த தயாரிப்பாளர் ஜெகதீஷ் பழனிச்சாமிக்கும், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் ஆகியோருக்கு முதலில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தொடர்ந்து அறுபத்தைந்து நாட்கள் படப்பிடிப்பு நடைபெற ஒத்துழைப்பு வழங்கிய இப்படத்தின் வசனகர்த்தாவும், எழுத்தாளருமான அழகிய பெரியவன், ஒளிப்பதிவாளர் மகேந்திரன் ஜெயராஜு, படத்தொகுப்பாளர் பிரேம்குமார், கலை இயக்குநர் ஏழுமலை, சண்டை பயிற்சி இயக்குநர் ஸ்டன்னர் சாம், நடன இயக்குநர் கிரிஷ், ஒலிப்பதிவு மற்றும் ஒலி கலவை பணியை மேற்கொண்ட அன்னபூர்ணா ஸ்டுடியோஸ், பாடலாசிரியர்கள் கார்த்திக் நேத்தா, யுகபாரதி மற்றும் ஞானக்கரவேல், தயாரிப்பு நிர்வாகிகள் குழுவினர், விளம்பர வடிவமைப்பு நிபுணர் கபிலன், ஆடியோ பார்ட்னர் திவோ, சமூக வலைதள பக்கங்களில் விளம்பரப்படுத்தும் பணியை ஏற்றிருக்கும் தினேஷ், மக்கள் தொடர்பு யுவராஜ் என படத்திற்காக பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் அனைவருக்கும் திரைக்கதையில் முக்கியத்துவம் இருக்கும் வகையில் இயக்குநர் தமிழ் கதையை எழுதி இருந்தார். விஜய்குமார், பாவெல் நவகீதன், திலீபன், நாச்சியாள் சுகந்தி முதல் இங்கு வருகை தந்திருக்கும் அனைத்து நடிகர்களும் தங்களது பங்களிப்பை முழுமையாக வழங்கி இருந்தனர்.
இந்தத் திரைப்படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடித்திருக்கிறார்கள். கதாநாயகிகளாக நடித்திருக்கும் ப்ரீத்தி அஸ்ராணி மற்றும் ரிச்சா ஜோஷி ஆகிய இருவருக்கும் கதையை வழிநடத்திச் செல்லும் முக்கியமான கதாபாத்திரங்களை இயக்குநர் தமிழ் அளித்திருக்கிறார். அவர்களும் இதனை உணர்ந்து நன்றாக நடித்திருக்கிறார்கள்.
சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலுடன் இரண்டு முறை தான் தொலைபேசியில் உரையாடி இருக்கிறேன். அவருடன் இரண்டு படங்களில் பணியாற்றி இருக்கிறேன். இதுவரை அவரிடம் நான் எந்த ஒப்பந்தமும் செய்து கொள்ளவில்லை. இந்தப் படத்தையும் அவரிடமே கொடுத்து விட்டேன். அனைத்து விசயங்களையும் அவரே பார்த்துக் கொள்வார். தமிழ் திரையுலகில் மிகவும் நேர்மையாகவும், பெருந்தன்மையுடனும் செயல்படும் அவருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
எல்லோரையும் விட விஜய் குமாரும் நானும் சிறந்த நண்பர்கள். அவர் என்னிடம் எப்போது பேசினாலும் சினிமாவை தவிர்த்து வேறு எதையும் பேசியதில்லை. அவருக்கு சினிமாவை தவிர வேறு எதுவும் தெரியாது. இந்தப் படம் உருவாகுவதற்கு அவர் மிகப்பெரிய காரணமாக அமைந்திருக்கிறார். அவரிடம் சினிமாவைப் பற்றி ஏராளமான புதிய புதிய ஐடியாக்கள் இருக்கிறது. சினிமாவில் அனைத்து விசயங்களையும் நன்கு அறிந்தவர். அவருக்கு நன்றி சொல்வதை விட, ஒரே வாக்கியத்தில் சொல்ல வேண்டுமென்றால் விஜய் இல்லையென்றால் நான் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
இந்தப் படத்தின் இயக்குநர் தமிழ்- எனக்கு விஜய் குமார் மூலமாகத்தான் அறிமுகமானார். பவுண்டட் ஸ்கிரிப்ட் ஒன்றைக் கொடுத்தார். அந்த கதையை படித்ததும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நேர்த்தியாக எழுதியிருந்தார்.
‘எலக்சன்’ ஒரு அரசியல் திரைப்படம். அரசியல் என்றால் மேம்போக்கான அரசியலை சொல்லவில்லை. இதுபோன்ற வகையிலான திரைப்படங்கள் வெளியாகி நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. நான் மிகவும் ரசித்தேன். ஆனால் இந்தத் திரைப்படம் தேர்தல் தருணத்தில் வெளியாகும் என்று நினைக்கவே இல்லை. படத்தின் இறுதி கட்ட பணிகள் ஆறு மாதங்களுக்கு மேல் நீடித்தது. இதனைத் தொடர்ந்து சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன் நல்லதொரு தேதியை தேர்வு செய்து இப்படத்தை வெளியிடுகிறார்.
இந்தப் படத்தின் பணிகளை நாங்கள் 2021 ஆம் ஆண்டில் தொடங்கினோம். இதுபோன்ற அருமையான கதையை வழங்கியதற்காக இயக்குநர் தமிழுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படம் அரசியல் சார்ந்த பிரச்சார படமாக இல்லாமல்.. குடும்ப உறவுகளை அழுத்தமாக பேசும் படைப்பாகவும், நல்லதொரு உச்சகட்ட காட்சியையும் இயக்குநர் வழங்கி இருக்கிறார்.
படப்பிடிப்பு தளத்தில் அனைவரையும் ஒருங்கிணைத்து, படத்தை உருவாக்கிய அவருடைய உதவியாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் இந்த படத்தின் மூலம் இயக்குநர் தமிழுக்கும் சிறந்த அங்கீகாரம் கிடைக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.” என்றார்.
இப்படத்தின் வசனகர்த்தாவும், எழுத்தாளருமான அழகிய பெரியவன் பேசுகையில், ” இந்த கதையை எழுதிவிட்டு, என்னை சந்தித்து கதையை
வாசிக்க சொன்னார் இயக்குநர் தமிழ். அவருடைய கதையை முழுவதுமாக படித்து முடித்தவுடன் எனக்கு ஆச்சரியமும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது. ஏனெனில் இந்தக் கதை முழுக்க முழுக்க அரசியலைப் பற்றி பேசுகிறது. ஆனால் அரசியலை மட்டும் பேசவில்லை. மனிதர்களுடைய குணாதிசயங்களை… கீழ் மட்டத்தில் இருக்கக்கூடிய மனிதர்களின் குணங்களை… என எல்லாவற்றையும் கலந்து பேசுகிறது. அற்புதமான திரைக்கதையாகவும் இருந்தது. அதன் பிறகு அவரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, ‘நன்றாக இருக்கிறது. ஆனால் ஒவ்வொரு காட்சியிலும் கூட்டம் கூட்டமாக மனிதர்கள் இருக்கிறார்களே..! ‘ என்று சொன்னபோது, அவர் ‘அதனை இப்படித்தான் படமாக்க வேண்டும் என்று நான் திட்டமிட்டிருக்கின்றேன்’ என்றார்.
வேலூர் மாவட்டத்தின் கொளுத்தும் வெயிலுடனும், வியர்வையுடனும் கூட்டமாக தான் பதிவு செய்ய வேண்டும் என்றார். அவருடைய பேச்சில் தெரிந்த உறுதியை பார்த்து இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.
‘அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்’ என சிலப்பதிகாரம் சொல்கிறது. நீங்கள் ஜனநாயகம் என்று சொல்லக்கூடிய.. சமத்துவம் என்று சொல்லக்கூடிய.. ஒரு கருத்தியலை… ஒரு அரசியல் கட்சியிடம்.. ஒரு அமைப்பிடம்.. தராமல்.. மக்களிடம் தந்தால் அவர்கள் என்ன செய்கிறார்கள்? அவர்கள் ஜனநாயகத்தை எப்படி பயன்படுத்துகிறார்கள்? ஒரு எளிய மனிதனிடம் அதிகாரம் சென்று சேரும் போது அதை அவன் எப்படி உள்வாங்கிக் கொள்கிறான்? எப்படி அதை பயன்படுத்துகிறான்? என்பதை இப்படம் சொல்கிறது.
ஆனால் ஒரு எளிய மனிதன்… எளிய மனிதனாக இருக்க இந்த சமூகம் விடுவதில்லை. குடும்பம் விடுவதில்லை. அவனுக்கு நெருக்கடியை தருகிறது. இவை எல்லாம் சேர்த்து தான் இந்த படத்தின் கதை உருவாகியிருக்கிறது என நான் கருதுகிறேன்.
ஜனநாயகம் என்றால் என்ன? என்ற கேள்வியை இந்த திரைப்படம் நிச்சயம் மக்களிடத்தில் எழுப்பும் என்றும் நான் கருதுகிறேன்.
இது தொடர்பாக மறைந்த தலைவர் ஒருவர் சிறந்த உதாரணம் ஒன்றை சொல்லி இருக்கிறார். ”ஒரு சட்டத்தை அரசு இயற்றுகிறது என்று சொன்னால்.. அதை நீங்கள் ஒரு பனிக்கட்டி என்று நினைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பனிக்கட்டியானது பத்து அல்லது இருபது மனிதர்களைக் கடந்து.. கடை கோடியில் இருக்கும் எளிய மனிதனை சென்றடையும் போது அது ஒரு துளி நீராகத்தான் போய் சேரும்” எனக் குறிப்பிடுவார்.
இன்றைய சூழலும் இப்படித்தான் இருக்கிறது. சிறந்த சட்டங்களை இயற்றினாலும்… அற்புதமான திட்டங்களை திட்டினாலும்… அதை யார் செயல்படுத்துகிறார்கள்? அவர்களுக்கான அரசியல் என்னவாக இருக்கிறது? அந்த விசயங்களை எல்லாம் சேர்ந்துதான் இந்த படம் பேசுகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய முதல் நாளில் நடிகர் விஜய் குமார் என்னை சந்தித்த உடன் ஆரத் தழுவி , ‘நீங்கள் இந்த படத்தில் இணைந்திருக்கிறீர்கள் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது’ என்றார்.
அதேபோல் படப்பிடிப்பின் போது ஒருநாள் தயாரிப்பாளர் படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தந்திருந்தார் அவருடன் பேசும் போது அவர் விஜய்குமார் மீது வைத்திருந்த நம்பிக்கை தெரிந்தது.
இயக்குநர் தமிழ் எழுத்தாளர்களுக்கு தர வேண்டிய மரியாதையும், கௌரவத்தையும் அளித்தபோது உண்மையிலேயே எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது
திரைப்படம் என்பது கலைகளின் கூட்டு முயற்சி. அதுபோன்ற தளத்தில் எழுத்தாளர்கள் பணியாற்றும்போது அது இன்னமும் மேம்படும். வேறு வகையிலான அடுக்குகளுடன் முன்னேற்றம் பெற்று மக்களிடம் சென்றடையும் என்ற நம்பிக்கை எனக்கு உறுதியாக இருக்கிறது. அந்த வகையில் இந்த எலக்சன் திரைப்படம் ஒரு யதார்த்தவாத திரைப்படமாக… அரசியலை தீவிரமாக பேசக்கூடிய.. அதனை எளிய மனிதரின் பார்வையிலிருந்து பேசக்கூடிய படைப்பாக உருவாகி இருக்கிறது. இது நிச்சயமாக வெற்றி பெறும் என்று நான் நம்புகிறேன். மக்களும், ரசிகர்களும், ஊடகமும் இதனை கொண்டாட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். ” என்றார்.
ஒளிப்பதிவாளர் மகேந்திரன் ஜெயராஜு பேசுகையில், ” இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆம்பூர் மற்றும் ஆம்பூர் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றது. நான் வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவன். படப்பிடிப்பு நடைபெற்ற தளங்கள் அனைத்தும் எனக்கு பரிச்சயமானவை. அதனால் படபிடிப்பு நடத்துவது எளிதாக இருந்தது.
வேலூர் என்றாலே வறட்சியான பகுதி தான் என அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இங்கும் அழகான கிராமங்கள் இருக்கிறது. அதனை இந்த திரைப்படத்தில் பதிவு செய்திருக்கிறோம். சினிமாவில் இதுவரை பொள்ளாச்சி போன்ற பகுதிகளில் உள்ள பசுமையான கிராமங்களை காண்பித்திருக்கிறார்கள். இதுவரை தமிழ் சினிமாவில் இடம் பெறாத அழகான கிராமங்கள் இந்த படத்தில் இடம் பெற்றுள்ளது.
படபிடிப்பு தொடர்ந்து 65 நாட்கள் நடைபெற்றாலும், இயக்குநரின் தெளிவான திட்டமிடலால் படப்பிடிப்பு எந்தவித சிரமமும் இல்லாமல் நடைபெற்றது. நாயகனான விஜய்குமார் அனைவரிடமும் சந்தோஷமாக பேசிக் கொண்டிருப்பார். திடீரென சீரியஸாகி கதைக்குள் சென்று விடுவார். படப்பிடிப்பு தளத்தில் ஒத்துழைப்பு வழங்கிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
எலக்சன் திரைப்படம் நன்றாக வந்திருக்கிறது. ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் புதிதாகவே இருக்கிறது. கதைக்களம்… அதில் நடித்த மக்கள்… பேசும் வசனங்கள்… அரசியல்.. அனைவருக்கும் அரசியல் தெரியும். ஆனால் நிறைய மக்களுக்கு தெரிவதில்லை. அதைப் பற்றி அவர்கள் கவலையும் படுவதில்லை. அரசியலுக்கும் அவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது போல் நடந்து கொள்வார்கள். ஆனால் நாம் உடுத்தும் உடை.. உண்ணும் உணவு.. என பல விசயங்களில் அரசியல் இருக்கிறது. அதனால் அனைவரும் அரசியலைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு இந்த படத்தை அனைவரும் திரையரங்கிற்கு வருகை தந்து பார்க்க வேண்டும்.” என்றார்.
நடிகர் பாவெல் நவகீதன் பேசுகையில், ” எலக்சன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற ஆம்பூர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் எங்கள் மீது காட்டிய நிபந்தனையற்ற அன்பு மறக்க இயலாது.
இந்த வாய்ப்பை வழங்கிய படத்தொகுப்பாளர் பிரேம்குமார் மற்றும் இயக்குநர் தமிழுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படம் வெளியான பிறகு பட தொகுப்பாளர் பிரேம்குமாருக்கு பெரிய அளவில் அங்கீகாரம் கிடைக்கும் என நம்புகிறேன்.
படப்பிடிப்பு தளத்தில் ஒரு காட்சியை படமாக்கும் போது இயக்குநரும், வசனகர்த்தாவும் சில வசனங்களிலும்… காட்சி அமைப்பிலும்… மாற்றம் செய்தனர். அந்தக் காட்சியில் நான் -நாயகன் விஜய்குமார் -நாயகி ப்ரீத்தி அஸ்ராணி ஆகியோர் இணைந்து நடிக்கிறோம். எனக்கும், நாயகனுக்கும் தமிழ் நன்றாக தெரியும். அதனால் மாற்றப்பட்ட காட்சியின் தன்மையை உணர்ந்து பேசுகிறோம். நடிக்கிறோம். ஆனால் தமிழ் மொழியில் அவ்வளவு சரளமாக பேசாத நடிகை ப்ரீத்தி அஸ்ராணி எங்களுக்கு நிகராக எங்களை விட சிறப்பாக அந்த காட்சியில் நடித்தார். அப்போதுதான் அவரின் திறமையைக் கண்டு வியந்தேன். அவருக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது.
படத்தில் எனக்கும், நாயகன் விஜய் குமாருக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க்அவுட்டாகி இருக்கிறது. அவர் மிகச்சிறந்த நல்ல மனிதர்.
எலக்சன் திரைப்படத்தை ஏன் பார்க்க வேண்டும் என்றால்..? இது ஒரு அரசியல் படம். நூற்றுக்கு எழுபது சதவீத பேருக்குத் தான் அரசியல் தெரிந்திருக்கும். மீதமுள்ளவர்கள் ஒதுங்கி விடுவார்கள். எழுத்தாளர் இமயம் மேடையில் பேசும் போது, ” இங்கு மக்கள் அணியும் உடையிலும்.. உண்ணும் உணவிலும்… இறந்துவிட்டால் புதைக்க வேண்டுமா ..? அல்லது எரிக்க வேண்டுமா..? என்ற விசயம் வரை அனைத்திலும் அரசியல் இருக்கிறது. ‘ என குறிப்பிட்டிருக்கிறார். எனவே நம்மை சுற்றி எந்த மாதிரியான அரசியல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதனை நாம் அறிந்து கொள்ள வேண்டும். இதைப் பற்றிய குறைந்தபட்ச புரிதலை இந்த எலக்சன் திரைப்படம் உங்களுக்கு உணர்த்தும். எனவே இந்த திரைப்படத்தை அனைவரும் திரையரங்கிற்கு வருகை தந்து பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.
நடிகை ரிச்சா ஜோஷி பேசுகையில்,” இந்தப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறேன். விரைவில் தமிழ் கற்றுக்கொண்டு தமிழில் பேசுகிறேன். இந்திய சினிமாவிற்கு பல நல்ல படைப்புகளை வழங்கிய தமிழ் திரையுலகத்தில் நடிகையாக அறிமுகமாகி, இந்த மேடையில் நிற்பதற்காக மகிழ்ச்சி அடைகிறேன். இந்த வாய்ப்பினை வழங்கிய தயாரிப்பாளர், இயக்குநர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் மொழி உச்சரிப்பில் உதவிய சக கலைஞரான விஜய் குமாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ” என்றார்.
நடிகர் திலீபன் பேசுகையில், ” படத்தின் திரைக்கதையை வாசிக்குமாறு இயக்குநர் தமிழ் கேட்டுக்கொண்டார். படித்தவுடன் வியந்தேன். உள்ளாட்சி தேர்தலை மையமாக வைத்து எழுதப்பட்ட கதை. இந்த விசயத்தில் கட்சி தலைமை சொன்னால் கூட கேட்க மாட்டார்கள். அந்த அளவிற்கு அவர்களுக்குள் ஒரு உடன்பாடு… பழிக்கு பழி வாங்க வேண்டும் என்ற உணர்வு… போன்ற பயங்கரமான அரசியல் பின்னணி உண்டு. இதனை அடிப்படையாக வைத்து வாழ்வியலை படமாக எடுத்திருக்கிறார். இந்தப் படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் உண்டு அனைவரும் பேசப்படுவார்கள்.
நடிகர் விஜய்குமார் உடன் பணியாற்றுவது எளிதானது அவர் இயக்குநராகவும் இருப்பதால்.. இந்தக் காட்சியில் இதை செய்தால் போதும் என்று எப்போதும் குறிப்புகளையும், ஆலோசனைகளையும் வழங்கிக் கொண்டே இருப்பார். அவருடைய இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை. அதை அவரிடமே தெரிவித்திருக்கிறேன். ” என்றார்.
சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன் பேசுகையில், ” இப்படத்தின் தயாரிப்பாளர் நண்பர் ஆதித்யா. ‘ஃபைட் கிளப்’ எனும் படத்தின் பணிகள் தொடங்கப்படுவதற்கு முன்னரே எனக்கு அறிமுகமானார். அவர் யார்? எப்படி? என்று எனக்குத் தெரியாது. தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு விஜய் குமாரை வைத்து படம் தயாரிக்கிறேன் என்றார்.
அதன் பிறகு அவரைப் பற்றி நான் தெரிந்து கொண்டேன். அமெரிக்காவில் உள்ள பிரபலமான சர்வதேச கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றில் உயர் பதவியில் பணியாற்றி வருகிறார். அவர் இதுவரை இரண்டு திரைப்படங்களை தயாரித்திருக்கிறார். இந்த இரண்டு திரைப்படத்திற்கும் அவர் உழைத்த பணத்திலிருந்து தயாரிப்பு செலவுகளை செய்திருக்கிறார்.
திரையுலகைப் பொறுத்தவரை உச்ச நட்சத்திரங்களை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்களை தவிர்த்து ஏனைய தயாரிப்பாளர்கள் அனைவரும் தங்களது உழைப்பில் ஈட்டிய சொந்த பணத்தை முதலீடு செய்து தான் படத்தை தயாரிக்கிறார்கள்.
இவர் தற்போது உள்ளாட்சி தேர்தலை மையப்படுத்தி எலக்சன் என்ற திரைப்படத்தை தயாரித்திருக்கிறார். எனக்குள், ‘வெளிநாட்டில் பணியாற்றி வரும் ஒருவர் எப்படி இந்த கதையை உள்வாங்கி தயாரித்திருக்க முடியும்’ என்ற கேள்வி எழுந்தது. அதன் பிறகு தான் அவர் இந்த பட குழுவுடன் குறிப்பாக இயக்குநருடனும், நாயகன் விஜயகுமாருடனும் எப்படி உணர்வு பூர்வமாக இணைந்திருக்கிறார் என்பது தெரிய வந்தது.
படத்தை தொடங்கும் போது என்னை சந்தித்து ஒரு முறை பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போதே படத்தை நிறைவு செய்துவிட்டு உங்களை தொடர்பு கொள்கிறேன் என்றார். அவர் சொன்னபடி படத்தின் பணிகளை நிறைவு செய்த பிறகு மீண்டும் என்னுடன் தொடர்பு கொண்டு பேசினார்.
அவரிடம் பொதுவாக திரையுலக அனுபவம் எப்படி இருந்தது? என கேட்டேன். இந்த படத்தை நான் தயாரித்து விட்டேன். ஆனால் பட தயாரிப்பின் போது.. படப்பிடிப்பு தளத்தில் ஒவ்வொருவருடைய கடின உழைப்பை நேரில் பார்த்தேன். நான் என்னுடைய பணத்தை மட்டும் தான் முதலீடு செய்து இருக்கிறேன் ஆனால் தொழில்நுட்ப கலைஞர்களும், நடிகர்களும் தங்களுடைய ஆத்மார்த்தமான உழைப்பை அர்ப்பணிப்புடன் வழங்குகிறார்கள். ஒரு தயாரிப்பாளராக இந்த படத்தை தயாரித்ததற்காக நான் பெருமிதம் அடைகிறேன். இந்தத் திரைப்படம் வெற்றி பெற்றால் இதன் மூலம் நான்கு தொழில்நுட்பக் கலைஞர்களும், நான்கு நடிகர்களும் வெற்றி பெறுவார்களே.. அவருடைய வாழ்க்கை சிறப்பாக இருக்குமே.. இதைவிட எனக்கு வேறு என்ன மகிழ்ச்சி என்றார். இதைக் கேட்டதும் என் கண்களில் கண்ணீர் வடிந்தது.
பொதுவாக சர்வதேச கார்ப்பரேட் நிறுவனங்களின் உயர் பதவிகளில் உள்ளவர்களிடத்தில் மனித நேயத்தை பார்க்க இயலாது என்று தான் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் தயாரிப்பாளர் ஆதித்யா திரைப்படத்தை ஒரு வணிகப் பொருளாக பார்க்காமல் உணர்வுபூர்வமான படைப்பாக பார்த்திருக்கிறார். அதிலிருந்து அவருடைய நட்பு மேலும் உறுதியானது.
அவர் தயாரித்த ‘ஃபைட் கிளப்’ படத்திற்கு எந்த ஒப்பந்தமும் செய்து கொள்ளவில்லை. தற்போது தயாரித்திருக்கும் ‘எலக்சன்’ திரைப்படத்திற்கும் எந்த ஒப்பந்தமும் செய்து கொள்ளவில்லை. இனி மேலும் எங்கள் இருவரிடத்திலும் எந்த ஒப்பந்தமும் செய்து கொள்ளப் போவதில்லை.
படத்தையும் படத்தின் பணியாற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களையும் அளவு கடந்து நேசிக்கும் ஒரு தயாரிப்பாளரை நான் வியந்து பார்க்கிறேன். இவரைப் போன்ற தயாரிப்பாளர்கள் தயாரிக்கும் திரைப்படங்கள் வெற்றி பெற வேண்டும். இதுபோன்ற திரைப்படங்கள் பெரிய வெற்றியை பெறும்போது இவரைப் போன்ற ஏராளமான புதிய தயாரிப்பாளர்கள் தமிழ் திரை உலகத்திற்கு வருகை தருவார்கள். புதிய தொழில்நுட்ப கலைஞர்களும் நடிகர்களும் அறிமுகமாவார்கள். தமிழ் திரையுலகம் மேலும் வலிமை பெறும்.
இந்த திரைப்படத்தை பார்த்தேன் திரைப்படத்தில் இடம் பெறும் வசனங்கள் கவனம் ஈர்க்கின்றன. உள்ளாட்சி தேர்தலை பற்றிய படமாக இருந்தாலும் அதில் நுட்பமாக சில விசயங்களை இயக்குநர் இணைத்திருக்கிறார்.
ஒரு அரசியல் கட்சியில் தொண்டராக இருக்கும் ஒருவரின் மகன் அரசியலுக்கு வந்தால் எப்படி இருக்கும்..? இந்த அடிப்படையில் அமைந்திருக்கும் இந்தக் களம் புதிது. இதுவரை தமிழ் திரையில் சொல்லப்படாதது.
ஒரு அரசியல் கட்சியின் தலைவரின் மகன் அரசியல்வாதியாவது பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.
ஒரு விளிம்பு நிலை மக்களின் பார்வையில் இருந்து இப்படி யோசித்தால் தான் இது போன்ற புதிய களம் உருவாகும்.
நடிகர் விஜய் குமார் அண்மையில் ஒரு இயக்குநருடன் கதை விவாதத்தில் தொடர்ச்சியாக ஆறரை மணி நேரம் விவாதித்ததை கண்டு வியந்திருக்கிறேன். அவர் சினிமாவில் மேலும் மேலும் உயர்வதற்கான தகுதியாக இதனை நான் பார்க்கிறேன்.
படத்தில் இதுவரை தமிழ் திரையில் சொல்லப்படாத நாயகனின் தந்தை கதாபாத்திரத்தை உயிர்ப்புள்ள கதாபாத்திரமாக திரையில் செதுக்கிய இயக்குநரை நான் மனதாரப் பாராட்டுகிறேன்.
வழக்கமான திரைப்படங்களிலிருந்து விலகி நேர்த்தியாகவும், கடுமையாகவும் உழைத்து ‘எலக்சன்’ திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இந்த திரைப்படம் மே 17ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. நிச்சயம் ரசிகர்களின் ஆதரவு கிடைக்கும் என நம்புகிறேன்.” என்றார்.
நடிகை ப்ரீத்தி அஸ்ராணி பேசுகையில், ” நான் எப்போது சென்னைக்கு வந்தாலும் மகிழ்ச்சியாகவும், புத்துணர்ச்சியாகவும் உணர்கிறேன். ‘அயோத்தி’ திரைப்படத்திற்கு பிறகு நான் ‘எலக்சன்’ திரைப்படத்தில் நடித்திருக்கிறேன். இந்தப் படத்திலும் அழுத்தமான பெண்மணி வேடத்தில் நடித்திருக்கிறேன்.
‘எலக்சன்’ படத்தின் முன்னோட்டத்தை பார்த்திருப்பீர்கள். ரசித்திருப்பீர்கள். உண்மையில் இந்த படத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்ததற்காக இயக்குநருக்கும், நடிகர் விஜய் குமாருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
பாவெல் நவகீதன் பேசுகையில் குறிப்பிட்ட காட்சியில் நடிக்கும் போது… உடன் நடிக்கும் நடிகர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பை பார்த்து, ரசித்து கொண்டு, அதனை அப்படியே உள்வாங்கி நடித்து விட்டேன். இதை நீங்கள் குறிப்பிட்டு பேசியதால் என்னுடைய தன்னம்பிக்கை இன்னும் அதிகரித்திருக்கிறது. இதற்காக மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஆம்பூர் பகுதியில் படப்பிடிப்புக்கு ஒத்துழைப்பு வழங்கிய மக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருக்கும் ரிச்சா ஜோஷியை நான் வரவேற்கிறேன். நான் ‘அயோத்தி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்தில் அறிமுகமாகும்போது எனக்கும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. அது உங்களுக்கும் கிடைக்கும் என வாழ்த்துகிறேன்.
எலக்சன் திரைப்படம் மே 17ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகிறது அனைவரும் வருகை தந்து படத்தை பார்த்து ரசித்து ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
படத்தின் நாயகனான விஜய்குமார் பேசுகையில், ” உள்ளாட்சி தேர்தல் அரசியலை மையப்படுத்தி உருவாகி இருக்கும் திரைப்படம் இது. களம் தேர்தலாக இருந்தாலும் கருத்துக்களை வலிந்து திணிக்காமல், அரசியலை அன்றாட வாழ்க்கையில் ஒரு அங்கமாக கொண்டிருக்கும் ஒரு கதாபாத்திரத்தை மையப்படுத்தி… உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற ஒரு ஃபேமிலி டிராமாவாகத்தான் இந்த படம் தயாராகி இருக்கிறது. படத்தில் இடம்பெறும் கதாபாத்திரங்கள் பிரச்சாரம் செய்வார்கள். ஆனால் படம் எந்த பிரச்சாரத்தையும் செய்யவில்லை. இந்தப் படத்தின் முதுகெலும்பு… இந்த கதையின் முதுகெலும்பு பற்றி சொல்ல வேண்டும் என்றால்.. நடிகர் ஜார்ஜ் மரியம் ஏற்று நடித்திருக்கும் நல்ல சிவம் என்ற ஒரு அரசியல் கட்சி தொண்டரை தான் சொல்ல வேண்டும். கட்சி தொண்டன் என்றால் தன்னலம் பார்க்காமல் மக்களுக்காகவும், கட்சிக்காகவும் கடுமையாக உழைக்கக்கூடிய ஒரு கேரக்டர். நம்மில் பெரும்பாலானவர்கள் இது போன்ற ஒரு கதாபாத்திரத்தை நம் குடும்பத்திலேயே பார்த்திருப்போம். அப்பா… பெரியப்பா… சித்தப்பா.. மாமா.. என யாரேனும் ஒருவரை பார்த்திருப்போம்.
‘அமாவாசை’ போன்றவர்கள் இருக்கும் அரசியலில் இப்படி கொள்கைக்காகவும், கட்சிக்காகவும் உழைக்கிற நல்லவர்களும் நிறைய பேர் இருக்கிறார்கள். அப்படி ஒரு கதாபாத்திரம் பற்றிய கதை இது.
இப்படி இருப்பவர்களை ஏமாளியாகவும், பிழைக்கத் தெரியாதவர்களாகவும் இந்த உலகம் பேசும் போது.. அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களுக்கும், அவருடைய மகனுக்கும் ஒரு நியாயமான கோபம் இருக்கும். அப்படி ஒரு மகன் கதாபாத்திரத்தில் தான் நான் நடித்திருக்கிறேன்.
இந்தப் படத்தில் இயக்குநர் தமிழுடன் இணைந்து பணியாற்றியது மிகுந்த மனநிறைவை அளித்தது.
தயாரிப்பாளர் ஆதித்யாவுடன் இது இரண்டாவது படம். அவருடனும் இணைந்து பணியாற்றியதில் மகிழ்ச்சி தான். தொடர்ந்து தரமான படங்களை வழங்க வேண்டும் என்பதுதான் எங்களது எண்ணம்.
படத்தில் பணியாற்றிய அனைத்து நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது முந்தைய திரைப்படமான ‘ஃபைட் கிளப்’ திரைப்படத்தை வெளியிட்ட என்னுடைய நண்பர் லோகேஷ் கனகராஜுக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ” என்றார்.
இயக்குநர் தமிழ் பேசுகையில், ” புகழ், பணம், போதை, பெண்… இதற்காக நான் சினிமாவிற்கு வரவில்லை. என்னை அழ வைத்ததையும், என்னை சிந்திக்க வைத்ததையும் சொல்வதற்காகவே சினிமாவிற்கு வந்தேன்.
எனது இயக்கத்தில் வெளியான ‘சேத்து மான